மகாராஷ்டிரத்தில்‌ சிவசேனா அதிருப்தி எம்‌எல்‌ஏக்களை தகுதிநீக்கம்‌ செய்யக்‌ கோரி அக்கட்சி சார்பில்‌ பேரவை துணைத்‌ தலைவரிடம்‌ கடிதம்‌ அளிக்கப்பட்டது. இந்தக்‌ கடிதம்‌ தொடர்பாக திங்கள்கிழமைக்குள்‌ (ஜூன்‌ 27) எழுத்துபூர்வமாகப்‌ பதிலளிக்குமாறு 16 அதிருப்தி எம்‌எல்‌ஏக்களுக்கு சட்டப்பேரவைச்‌ செயலகம்‌ (ஜூன்25) நேற்று நோட்டீஸ்‌ அனுப்பியது.

சிவசேனா தலைமைக்‌ கொறடா சுனில்‌ பிரபு இந்த 16 எம்‌எல்‌ஏக்களின்‌ பெயர்களைக்‌ குறிப்பிட்டு அளித்த கடிதத்தின்‌ அடிப்படையில்‌, அவர்களுக்கு மகாராஷ்டிர விதான்‌ பவன்‌ (சட்டப்பேரவை) முதன்மைச்‌ செயலர்‌ ராஜேந்திர பகவத்‌ கையொப்பமிட்ட கடிதம்‌ அனுப்பட்டுள்ளது.

அதிருப்தி எம்‌எல்‌ஏக்கள்‌ குழுவின்‌ தலைவர்‌ ஏக்நாத்‌ ஷிண்டே உள்ளிட்டோருக்கு இந்தக்‌ கடிதம்‌ அனுப்பப்பட்டுள்ளது. அதில்‌, ‘சிவசேனை தலைமைக்‌ கொறடா சுனில்‌ பிரபு சார்பில்‌ சட்டப்பேரவை துணைத்‌ தலைவர்‌ நர்ஹரி ஜிர்வாலிடம்‌ ஒரு கடிதம்‌ அளிக்கப்பட்டது. அதில்‌ மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினர்கள்‌ (மாறுதலின்‌ அடிப்படையில்‌ தகுதிநீக்கம்‌) விதிகள்‌, 1986-இன்‌ கீழ்‌ 16 அதிருப்தி எம்‌எல்‌ஏக்களை தகுதி நீக்கம்‌ செய்ய வேண்டுமெனக்‌ கோரியுள்ளார்‌. அதன்‌ அடிப்படையில்‌, வரும்‌ திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்குள்‌ பதிலளிக்க வேண்டும்‌’ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில்‌ கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சிக்‌ கூட்டத்தில்‌ பங்கேற்க வருமாறு குவாஹாட்டியில்‌ முகாமிட்டிருக்கும்‌ ஏக்நாத்‌ ஷிண்டே தலைமையிலான கட்சியின்‌ 16 அதிருப்தி எம்‌எல்‌ஏக்களுக்கும்‌ தலைமைக்‌ கொறடா சுனில்‌ பிரபு அழைப்பு விடுத்தார்‌. ஆனால்‌, கட்சிக்‌ கூட்டத்தில்‌ பங்கேற்க அவர்கள்‌ வரவில்லை. அதனைத்‌ தொடர்ந்து இந்த நடவடிக்கையை சிவசேனை மேற்கொண்டுள்ளது.

உத்தவ்‌ தாக்கரேவுக்கு அதிகாரமளித்து தீர்மானம்‌: சிவசேனையின்‌ மூத்த தலைவரான ஏக்நாத்‌ ஷிண்டே, உத்தவ்‌ தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்‌. தற்போது அஸ்ஸாமின்‌ குவாஹாட்டி நகரில்‌ முகாமிட்டுளள அவருடன்‌ சிவசேனையைச்‌ சேர்ந்த எம்‌எல்‌ஏக்களும்‌, சுயேச்சை எம்‌எல்‌ஏக்கள்‌ சிலரும்‌ உள்ளனர்‌. தனக்கு 9 சுயேச்சைகள்‌ மற்றும்‌ 37 சிவசேனை எம்‌எல்‌ஏக்களின்‌ ஆதரவு இருப்பதாக ஏக்நாத்‌ ஷிண்டே கூறி வருகிறார்‌.

இதன்‌ காரணமாக, மகாராஷ்டிரத்தில்‌ சிவசேனா தலைமையிலான அரசு கவிழும்‌ நிலை உருவாகியுள்ளது.

இந்தச்‌ சூழலில்‌, சிவசேனா  கட்சியின்‌ தேசிய செயற்குழு சனிக்கிழமை கூடியது. அதில்‌, அதிருப்தி எம்‌எல்‌ஏக்கள்‌ மீது நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரத்தையும்‌ உத்தவ்‌ தாக்கரேவுக்கு அளித்தல்‌, சிவசேனையின்‌ பெயர்‌ மற்றும்‌ அதன்‌ நிறுவனர்‌ பால்‌ தாக்கரேவின்‌ பெயரை ஏக்நாத்‌ ஷிண்டே தலைமையிலான அதிருப்தி பிரிவு உள்பட வேறு எந்த அமைப்பும்‌ பயன்படுத்த முடியாது, அடுத்து வரும்‌ அனைத்து உள்ளாட்சித்‌ தேர்தல்களிலும்‌ கட்சி போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டன என்று கட்சியின்‌ தலைமை செய்தித்‌ தொடர்பாளர்‌ சஞ்சய்‌ ரெளத்‌ கூறினார்‌.

24 மணி நேரத்தில்‌ பதவியை இழந்துவிடுவர்‌: சஞ்சய்‌ ரெளத்‌ மேலும்‌ கூறுகையில்‌, ‘அதிருப்தி எம்‌எல்‌ஏக்கள்‌ குழுவில்‌ மாநில அமைச்சர்களான குலப்ராவ்‌ பாட்டீல்‌, தாதா பூஸே, சாண்டீபன்‌ பூம்ரே உள்ளிட்டோர்‌ இடம்பெற்றுள்ளனர்‌. அவர்களுக்கு கட்சி போதுமானதை வழங்கிவிட்டது. தற்போது அவர்கள்‌ தவறான பாதையைத்‌ தேர்ந்தெடுத்துள்ளனர்‌. அவர்கள்‌ 24 மணி நேரத்தில்‌ அமைச்சர்‌ பதவியை இழந்துவிடுவர்‌’என்றும்‌ கூறினார்‌.

“கட்சியைவிட்டு வெளியேறவில்லை’

சிவசேனா பெயரை வேறு யாரும்‌ பயன்படுத்தக்‌ கூடாது என்று அக்‌ கட்சியின்‌ தேசிய செயற்குழுவில்‌ தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்ட சூழலில்‌, ‘நாங்கள்‌ யாரும்‌ கட்சியைவிட்டு வெளியேறவில்லை. ஏக்நாத்‌ ஷிண்டே தலைமையில்‌ ‘சிவசேனா-பாலாசாஹிப்‌’ என்ற பெயரில்‌ தனிக்‌ குழுவாக செயல்படுவோம்‌’ என்று குவாஹாட்டியில்‌ முகாமிட்டிருக்கும்‌ அதிருப்தி எம்‌எல்‌ஏக்கள்‌ சனிக்கிழமை தெரிவித்தனர்‌. இதுகுறித்து அதிருப்தி எம்‌எல்‌ஏக்களில்‌ ஒருவரான தீபக்‌ கெசர்கர்‌ மேலும்‌ கூறுகையில்‌, ‘மூன்றில்‌ இரண்டு பங்கு உறுப்பினர்களின்‌ ஆதரவு எங்களுக்கு உள்ள நிலையில்‌, சிவசேனை சட்டப்பேரவை குழு தலைவராக ஏக்நாத்‌ ஷிண்டேதான்‌ இருப்பார்‌.

முதல்வர்‌ உத்தவ்‌ தாக்கரே கடந்த 2019-இல்‌ பாஜகவுடன்‌ கூட்டணியை முறித்துக்கொண்டு, தேசியவாத காங்கிரஸ்‌ மற்றும்‌ காங்கிரஸ்‌ கட்சிகளுடன்‌ கூட்டணி வைத்ததுதான்‌ எங்களுடைய அதிருப்திக்கு காரணம்‌. கட்சியைப்‌ பிளவுபடுத்துவது எங்களுடைய எண்ணமல்ல. பாஜகவுடன்‌ கூட்டணி வைக்க வேண்டும்‌
என்பதுதான்‌ எங்களுடைய கோரிக்கை’ என்று கூறினார்‌.

உத்தவ்‌ தாக்கரே அரசுக்கான ஆதரவை விலக்கிக்‌ கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கெசர்கர்‌, ‘ஆதரவை ஏன்‌ விலக்க வேண்டும்‌? நாங்கள்‌ சிவசேனை கட்சிதான்‌. சட்டப்பேரவையில்‌ நாங்கள்‌ பெரும்பான்மையை நிரூபிப்போம்‌. அதே நேரம்‌, வேறு எந்தக்‌ கட்சியுடனும்‌ எங்களுடைய குழுவை இணைக்க மாட்டோம்‌’ என்றார்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here