மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பித்தது.

டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) எடுத்து மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கியது ஆஸ்திரேலிய அணி.

துவக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஹாரிஸ் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் கவாஜாவும் 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஜடேஜா பந்தில் விக்கெட்டை இழந்தார். தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலிய அணி,

தேநீர் இடைவேளையின் பின் கம்மின்ஸ் 17 ரன்களிலும், பெயின் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். லயன் மற்றும் ஹாசில்வுட் பும்ராவின் அனல் பற்க்கும் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி 151 ரன்களில் சுருண்டது.

இந்தியா தரப்பில் தனது அதிரடியான பந்து வீச்சால், பும்ரா 33 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் ஜடேஜா 2 விக்கெட், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தற்போது 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்