மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் இடம்பெற்றிருந்த நிலையில், அது திடீரென அகற்றப்பட்டது.

அதிமுக – பாஜக கூட்டணியில் அங்கம்வகிப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்த நிலையில் மறுபக்கம் தேமுதிக நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்துக்கு வந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக – பாஜக பொதுக் கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் புகைப்படமும், ஜிகே வாசனின் புகைப்படமும் நீக்கப்பட்டுள்ளது.

அதிமுக – பாஜக – பாமக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பான அறிவிப்பு வெளியாகாத நிலையில், இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்ட மேடையில் கூட்டணித் தலைவர்களின் புகைப்படங்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படம் வைக்கப்பட்டு பிறகு நீக்கப்பட்டது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.

இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தற்போது சென்னை விமான நிலையம் வந்துள்ளார். வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நடைபெறும் பாஜக-அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். முன்னதாக, மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

அரசு சார்பிலான நிகழ்ச்சிக்குப் பிறகு, அதிமுக-பாஜக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றுப் பேசுகிறார். முதல் முறையாக, அதிமுக-பாஜக அணியில் இடம்பெற்றுள்ள பாமக, புதிய நீதிக் கட்சிகளின் தலைவர்களும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் இணைந்த பிறகு அக்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here