அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை; ரசமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அதிமுக உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு பிரச்னைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்பட்டது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நியமனம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, அதிமுக வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுக கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா குறித்த பேச்சு எழவில்லை. அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பேச வேண்டாம் என தலைமை ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது’ என்றார்.இதனிடையே, அதிமுக கூட்டத்தில் கராசார விவாதம் நடந்ததா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை; கட்சியில் கருத்து வேறுபாடும் இல்லை என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here