பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் மதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசு பேருந்து பயணக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவுக்கு உயர்த்தி இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. டீசல் விலை உயர்வை இதற்குக் காரணமாகச் சொல்வதை ஏற்க முடியாது. ஏனெனில், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், அதன் பயன் பொது மக்களுக்குச் சென்றடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைப்பது இல்லை. 2014-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி 133.47 விழுக்காடும், டீசல் மீதான உற்பத்தி வரி 400.86 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2011 ஆண்டைக் காட்டிலும் 52 விழுக்காடு குறைந்து விட்டது. ஆனால், தமிழக அரசு 2011 ஆம் ஆண்டு பேருந்து பயணக் கட்டணத்தை 60 விழுக்காடு உயர்த்தியது.

vaiko

கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்தபோது, பெட்ரோல், டீசல் அந்த வரி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. எனவே, அவை மீதான விற்பனை வரி, வாட் வரி ஆகியவை தொடருகின்றன. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு 23 விழுக்காடு வாட் வரி விதிக்கிறது; தமிழக அரசு 27 விழுக்காடு வாட் வரி விதிக்கிறது. இதையும் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் அ.தி.மு.க. அரசு 27 ரூ லிருந்து 34 ரூ ஆக உயர்த்தியது. எனவே, பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலையைக் காரணமாகக் கூறுவதை நியாயப்படுத்த முடியாது.

தமிழக அரசு அறிவித்துள்ள பேருந்துப் பயணக் கட்டண உயர்வு தனியார் ஆம்னி பேருந்துக் கட்டணத்தை விட அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து நெல்லைக்கு ஆம்னி பேருந்து கட்டணம் தற்போது ரூ. 650 ஆகும். தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்போது சென்னை-நெல்லை பேருந்துக் கட்டணம் ரூ. 440ஆக இருப்பது ரூ. 664ஆக உயருகிறது. அதைப் போல குறைந்தபட்ச பேருந்து கட்டணம் சாதாரணப் பேருந்துகளில் ரூ. 7 ஆகவும், நகரப் பேருந்துகளில் ரூ. 6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது, சாதாரண ஏழை எளிய மக்களுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அ.தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடுகள், போக்குவரத்துத் துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் போன்றவற்றால்தான் அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் நட்டம் அடைகிற நிலைமை ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. பொது போக்குவரத்துச் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து, மத்திய போக்குவரத்துத் துறை கடந்த நவம்பர் மாதம் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் நாடு முழுவதும் செயல்படும் 47 போக்குவரத்துக் கழகங்களின் செலவு, வருவாய், பேருந்து இயக்கச் செயல்பாடுகள், விபத்துகள், காலாவதியான பேருந்துகள் எண்ணிக்கை உட்பட பல்வேறு விவரங்கள் விரிவாக இடம் பெற்றுள்ளன.

காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் பீகாருக்கு அடுத்த இடத்தை தமிழ்நாடுதான் பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் 78.3 விழுக்காடு பேருந்துகள் காலாவதி ஆனவை என்று மத்திய போக்குவரத்துத் துறையின் அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது.

அ.தி.மு.க. அரசின் இலஞ்ச, ஊழல் நிர்வாக இலட்சணத்தால் அரசுப் போக்குவரத்துத் துறை தடுமாறுகிறது; அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அலைகழிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மக்கள் மீது சுமையை ஏற்றுவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது ஆகும். பேருந்து பயணக் கட்டண உயர்வால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் பொருட்கள், காய்கறி, பழங்களின் விலைகளும் கடுமையாக உயரும்.

பேருந்துக் கட்டண உயர்வைத் தாறுமாறாக அதிகரித்தது போதாது என்று, இனி எரிபொருள், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், பராமரிப்புச் செலவுகள் இவற்றைக் கணக்கிட்டு அவ்வப்போது பேருந்து பயணக் கட்டணங்களைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது எதேச்சாதிகாரமானது ஆகும்.

அ.தி.மு.க. அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டு வருகிறது. மக்களின் கோபத்தையும் கொந்தளிப்பையும் தமிழக அரசுக்கு உணர்த்திடும் வகையில் ஜனவரி 27-ஆம் தேதி அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்த இருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்கும். கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், கழகத் தோழர்கள் பெருமளவில் இந்த அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here