தமிழக பல்கலைக்கழகங்களுக்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் துணைவேந்தர்களாக நியமிக்கும் ஆளுநரின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், ”அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேரா. எம்.கே சூரப்பாவை கல்வியாளர்கள், எதிர்கட்சியினரின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக காலியாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் புதிய துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்கும் நடைமுறையே முன்பு இல்லாத நிலையில், தற்போது வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் துணைவேந்தர்களாக நியமிக்கும் பழக்கம் இப்போது திடீரென அதிகரித்துள்ளது.

சமீபத்தில் தான் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலை கழகத்திற்கு தேர்வுக் குழுவின் இறுதி பரிந்துரையில் இல்லாத ஆந்திராவை சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கேரளாவைச் சேர்ந்த பிரமிளா தேவி நியமனம் செய்யப்படார். அந்த வகையில் எம்.கே.சூரப்பா தமிழக பல்கலைக்கழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள 3-வது வெளிமாநில கல்வியாளர் ஆவார். இதற்கு முன்பு இப்படி அடுத்தடுத்து வெளிமாநிலத்தவர் திணிக்கப்பட்டதில்லை. ஆளுநரின் இந்த நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல.

அம்பேத்கர் சட்டப் பல்கலை கழக துணைவேந்தராக இந்துத்துவ சிந்தனையாளர் சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டது தொடங்கி, தற்போது சூரப்பா நியமனம் வரை ஆளுநரின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. எதிர்கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தும் ஆளுநர் அதனை கண்டுகொள்ளவில்லை.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிகளுக்கு தமிழக கல்வியாளர்கள் மத்தியிலேயே கடும் போட்டி இருந்த நிலையில், அவர்களை புறக்கணித்துவிட்டு, வெளிமாநில கல்வியாளர்களை நியமனம் செய்வது தமிழக கல்வியாளர்களை அவமானப்படுத்துவது போல உள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கும் ஆளுநருக்கே துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் இருந்தாலும், தமிழக அரசின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, தொடர்ந்து தமிழகத்தின் குரலுக்கு மதிப்பளிக்காமல் சர்வாதிகார போக்கில் செயல்படும் ஆளுநரின் நடவடிக்கையை, தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.

தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநர் தலையீடு, ஆளுநரின் தன்னிச்சையான நியமனங்கள் போன்றவை தமிழகத்தில் நிலவும் இரட்டை நிர்வாகத்தை வெளிப்படையாக காட்டுகிறது. கூட்டாட்சி தேசத்தில் இதுபோன்ற இரட்டை அதிகார பீடங்கள் மாநிலத்தின் சுயாட்சியை பாதிக்கும். ஆகவே, தொடரும் தமிழக ஆளுநரின் தன்னிச்சை செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநில அரசு செயல்பட வேண்டும். தொடர்ந்து தனது அதிகாரங்களை ஆளுநர் மூலம் மத்திய அரசிடம் அடமானம் வைப்பதை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்