நேற்றைய (ஆக 26, 2018) தினத்தந்தியில் விஜயலட்சுமி பந்தையன் என்பவர் எழுதிய “முன்னாள் மனைவியோடு புதிய வாழ்க்கை” எனும் கட்டுரை பார்த்தேன். விவகரத்து செய்த இணையருடன் மீண்டும் சேர்ந்து வாழும் விருப்புடன் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளும் விருப்பம் கொண்ட இணையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் எழுதியிருந்தார்.

ஏதோ முரண்பாடுகள், விட்டுக் கொடுக்க இயலாமை, குடும்பப் பிரச்சினைகள், கௌரவப் பிரச்சினைகள் ஆகியவற்றின் ஊடாக சேர்ந்து வாழ இயலாமல் பிரியும் கணவன் மனைவியர் வெகு விரைவில் மனம் மாறி சுய விமர்சனம் செய்துகொண்டு மீண்டும் சேர்கிற நிலை அதிகரித்து வருவதாக அவர் கூறுகிறார்.

நல்லதுதான். ஒருவேளை அவர்களுக்குக் குழந்தைகள் இருந்திருந்தால் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் அது பயனுடையதாக இருக்கும். அதை ஒட்டி கட்டுரை ஆசிரியர் விவாகரத்து செய்ய முடிவு செய்தோருக்கு சில நல்ல ‘டிப்ஸ்’ களை வழங்குகிறார். தேவையில்லாமல் விவாகரத்து செய்ய இருப்பவர் மீது அவதூறு பரப்புவது, வெறுப்பது, அவர்களின் குடும்பங்களின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குவது ஆகியவற்றைத் தவிர்ப்பது அவர் சொல்லும் முதல் அறிவுரை. விவாகரத்து என முடிவெடுத்தவுடன் சற்றுக் காலம் தாழ்த்தி மேல் நடவடிக்கை எடுப்பது, விவாகரத்து ஆனபின்னும் இனியும் அதில் மாற்றங்கள் வரலாம் என்று அதற்கும் ஒரு இடம் அளிக்க வேண்டும் என்பது அவரது இரண்டாம் பரிந்துரை

மாணவப் பருவத்தில் நான் பார்த்த சேதுமாதவனின் ‘வாழ்வே மாயம்’ எனும் மலையாளப்படம் நினைவுக்கு வருகிறது.

சத்யன் ஷீலா தம்பதியர் ஒருவர் மீது ஒருவர் மிகப் பிரியமாக இருந்தும் ஏதோ ஒரு கவுரவப் பிரச்சினையில் பிரிந்து அது விவாகரத்தில் போய் நிற்கிறது. விவாகரத்து நடக்கும்போது ஷீலா கர்ப்பமாக இருக்கிறார். ஆத்திரம் கொண்ட ஷீலாவின் தந்தைக்கு அது ஒரு குடும்ப கவுரவப் பிரச்சினை. உடனடியாக வேறு ஒரு வசதியான மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார். புதிய கணவர் ஒரு பண்பான மனிதர் (நடிகர் யார் என நினைவில்லை. உமர் என நினைக்கிறேன்). ஒற்றுமையாக வாழ்கின்றனர். முதல் கணவன் மூலம் பிறந்த பெண் குழந்தையை அவர் தன் மகளாகவே வளர்க்கிறார்.

இன்னொரு பக்கம் சத்யன் ஷீலாவின் நினைவாகவே இருந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகித் தன் வாழ்வைச் சீரழித்துக் கொள்கிறார். ஒருநாள் அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. ஷீலாவிடமிருந்து.. உணர்ச்சி மேம்பட அதைப் பிரித்து வாசிக்கும்போது அவர்களின் மகளுக்குத் திருமணம் நடக்க உள்ளதையும், அதற்கு சத்யன் வந்திருந்து தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்தத் திருமணச் சடங்கில் பங்குபெற வேண்டும் எனவும் கோரியிருப்பார்.

சத்யன் வந்து, மனைவியைச் சந்திக்கிறார்., மகளை அழைத்து வருகின்றனர். அதுவும் ஷீலாதான். தான் பிரிந்த காலத்தில் மனைவி எப்படி இருந்தாளோ அப்படி இன்று மகள் அவர்முன் நிற்கிறாள். மகளை ஆசீர்வதித்து செல்லும் காட்சிகள் அந்த மாணவப் பருவத்தில் மனதைத் தொட்டவை. மற்றபடி படத்தின் முடிவெல்லாம் இப்போது நம்மால் செரித்துக் கொள்ள இயலாதவை. திரும்பிவரும் சத்யன் இறந்து போவார். அறிந்த ஷீலாவும் அவரோடு இறந்து போவதாகப் படம் முடியும்.

இரண்டுநாள் முன்னதாக தோழர் சுகுமாரனின் இறுதிச் சடங்கிற்காக திருத்தணிக்கு அருகிலுள்ள ‘நகரி’க்குச் சென்ற போது என்னுடனும் தோழர் பாஸ்கருடனும் CRPC அமைப்பைச் சேர்ந்த இளம் வழக்குரைஞர் ராதிகாவும் வந்திருந்தார். அவர்கள் அலுவலகத்தில் இப்போது மிகப் பெரிய அளவில் விவாகரத்து வழக்குகள் வந்து குவிவதாகச் சொன்னார். அதோடு மிகவும் நுணுக்கமாக அவற்றின் தன்மைகளைப் பற்றியும் அவர் விளக்கினார்.

விவாகரத்து என்பது முன்னைப்போல ஒரு கௌரவக் குறைவான செயலாக இப்போது இல்லை. ஒருவர் விவாகரத்தானவர் என்பது அவமானத்துக்குரிய ஒன்றாகவும் கொள்ளப்படுவதில்லை என்றார். இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். முன்னெல்லாம் விவாகரத்துகள் குறைவாக இருந்தது என்பது பெருமைக்குரிய விடயம் அல்ல. கணவரின் கொடுமைகளையும், பிடிக்காத ஒரு வாழ்வையும் சுமந்து கொண்டு ஒரு வாழ்நாளை அழித்துக் கொள்வதைவிட இவ்வாறு ரத்து செய்து வேறு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதைச் சமூக வளர்ச்சியின் ஒரு குறியீடாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

பெண்களே இப்போதெல்லாம் முன்கை எடுத்து விவாக ரத்து கோருவதையும், அப்படி விவாகரத்து ஆனவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்துகொள்வது, தகுந்த இணையர் கிடைப்பது என்பதெல்லாமும் கூட இப்போது பெரிய பிரச்சினைகளாக இல்லை எனவும் அவர் சொன்னர். இதுவும் வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

எந்த வயதினர் அதிகமாக விவாகரத்து செய்து கொள்கின்றனர் எனக் கேட்டபோது, அவர் சற்று யோசித்துவிட்டு எல்லா வயதினரும், விவாகரத்து செய்கின்றனர். அதேபோல சமூக அமைப்பின் பல்வேறு மட்டங்களிலும் விவாகரத்துகள் இவ்வாறு நடக்கின்றன என்றும் கூறினார்.

குழந்தைகளின் எதிர்காலம் பற்றிக் கேட்டபோது பொதுவாகக் குழந்தைகள் தாயிடமே இருக்கும்படியாகத்தான் முடிவுகள் அமைகின்றன. குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அதை எல்லாம் கணக்கில் கொண்டு ரத்துக்குப் பிந்திய வாழ்வில் மனைவிக்கு maintenance தொகை உரிய வகையில் அளிக்க நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக விவாகரத்து வழக்குகள் காலதாமதம் ஆகிற ஒன்றானாலும் இடையிலேயே இருதரப்பும் சமரசமாகி இருதரப்பும் ஒப்புதலுடன் கூடிய விவாக ரத்தாக முடித்துக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

சமூகம் பெரிய அளவில் மாறிக் கொண்டுள்ளது. இவை குறித்தும்கவலைப்படுவதற்கொன்றும் இல்லை. பழையன கழிதலும், புதியன புகுதலும் கால ஓட்டத்தின் இயல்புகளில் ஒன்று.

இவை வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்களே. .

பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்

புதிய தமிழ் மொழிப் பாடநூல்கள்: ஒரு பார்வை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்