லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் (L&T) நிர்வகிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியுள்ளது . சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளியில் இருக்கும் துறைமுகத்தின் 97 சதவிகித பங்குகளை , லார்சன் அண்டு டூப்ரோ (L&T) நிறுவனத்திடமிருந்து இருந்து அதானி குழுமம் வாங்கியுள்ளது.

இந்த துறைமுகத்தை ரூ1950 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்டுப்பள்ளி துறைமுகம், சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகவும் நவீன துறைமுகங்களில் காட்டுப்பள்ளியும் ஒன்று . அந்த துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற இடங்களுக்குச் செல்வது சுலபமாக இருக்கும் .

எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனம் (எல்டிஎஸ்பி) நிறுவனம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிர்வகித்து வருகிறது. இதை அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் வாங்கியுள்ளது .

நேற்று (வியாழக்கிழமை) லார்சன் & டுப்ரோ, எம்ஐடிபிஎல், எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனம் (எல்டிஎஸ்பி), அதானிபோர்ட்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ) மற்றும் அதானி குழுமம் போன்றவை காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்குவதற்கான ஒப்பந்த்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

காட்டுப்பள்ளி துறைமுகம் ஆழ்கடல் துறைமுகமாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் 2013-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதில் இரண்டு பெர்த்கள் உள்ளன. இதன் நீளம் 710 மீட்டராகும். இந்த பெர்த்களில் 6 கிரேன்கள் மற்றும் 15 ஆர்டிஜி கிரேன்களும் உள்ளன. இவை சரக்குப் பெட்டகங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றவை.

ஏற்கெனவே அதானி குழுமம் கேரள மாநில அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விழிஞம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து அதானி போர்ட்ஸின் சிஇஓ கரண் அதானி, ‘தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் வர்த்தக அமைச்சகம், காட்டுப்பள்ளி துறைமுக பங்குகளை வாங்கியதற்கு அதன் ஒப்புதலைக் கொடுத்துள்ளன. தென்னிந்தியாவில், காட்டுப்பள்ளி துறைமுகத்தை, மிகப் பெரிய துறைமுகமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும். 40 மில்லியன் மெட்ரிக் டன் அளவை கையாளும் அளவுக்கு இந்த விரிவாக்கம் இருக்கும்’ என்று கூறியுள்ளார். இந்திய அளவில் துறைமுகம் கட்டுதலில் முன்னணியில் அதானி போர்ட்ஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here