குஜராத்தில், அதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் ஜிகே பொது மருத்துவமனையில், கடந்த 5 வருடங்களில் அதாவது 2014 ஆண்டு முதல் 1000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குஜராத் அரசு சமர்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் வெப்சைட்டில் இந்த ஜிகே பொது மருத்துவமனை குஜராத் அதானி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சின் ஒரு முயற்சியாகும் என்றும் அரசு -தனியார் கூட்டு முயற்சியான அதானி கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்தும் மருத்துவமனை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது, மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைவதை பற்றி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, துணை முதல்வர் நிதின் பட்டேல் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், குஜராத்தின் புஜ் பகுதியில் தொழிலதிபர் அதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் ஜி.கே என்னும் மருத்துவமனையில், கடந்த 5 ஆண்டுகளில் 1,018 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கடந்த 2014-15-ஆம் ஆண்டில் 188 குழந்தைகளும், 2015-16-ஆம் ஆண்டில் 187 குழந்தைகளும், 2016-17-ஆம் ஆண்டில் 208 குழந்தைகளும், 2017-18-ஆம் ஆண்டில் 276 குழந்தைகளும், 2018-19 நடப்பாண்டில் 159 குழந்தைகளும் வெவ்வேறு உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொற்று மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்னைகளால் பச்சிளம் குழந்தைகள் அதிகம் மரணித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ` குழந்தைகள் மரணம்குறித்து அரசு ஆய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது. அதானியின் ஜிகே மருத்துவமனை, அரசு வகுத்த நெறிமுறைகள் மற்றும் நிலையான வழிகாட்டுதல்களோடு சிகிச்சை அளித்துவருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்பின், மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஆகஸ்ட் 2017 இல் உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 70 குழந்தைகள் மரணமடைந்தது நாட்டையே உலுக்கியது. அக்குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்தார்கள் என்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏஜண்டுகளுக்கு மபணம் செலுத்தாத காரணத்தாலேயே அம்மரணங்கள் நிகழ்ந்தது என்றும் கூறப்பட்டது.

அதே மாதத்தில் ஜாம்ஷெட்பூரில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவ கல்லூரியில் 52 குழந்தைகள் மரணமடைந்தார்கள் .ஊட்டச்சத்து குறைபாடு அதற்கு காரணமாக கூறப்பட்டது .

Courtesy : Scroll.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here