அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் திடீரென மாற்றப்பட்டுள்ளார். புதிய பதிவாளராக ஜெ.குமார் பொறுப்பேற்றுள்ளார்.

விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக பதிவாளர் கணேசனை மாற்ற வலியுறுத்தி ஆளுநரிடமும், பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெள்ளிக்கிழமை கடிதம் அளித்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

புதிய பதிவாளராக ஜெ.குமார் பொறுப்பேற்பு: இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் அவசர ஆட்சிக் குழு வெள்ளிக்கிழமை கூட்டப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதுவரை பல்கலைக்கழகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநராக இருந்த ஜெ.குமார், புதிய பதிவாளராக நியமிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மாலையே அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

3 பேர் ஏற்கெனவே இடைநீக்கம்: அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களின் அலுவலகம், வீடுகளில் தீவிர சோதனையையும் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் உமா மற்றும் பல்கலைகக்கழக உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் இருவரையும் பல்கலைக்கழகம் தற்காலிகப் பணி நீக்கம் செய்தது.

பதிவாளர் மாற்றத்துக்குக் காரணம் என்ன?:

விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு நடந்த கால கட்டத்தில், பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த கணேசன் தான் இந்த முறைகேட்டுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் . எனவே, அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

துணைவேந்தர் சூரப்பா உத்தரவு: அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், பதிவாளர் கணேசனை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அதை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கும், பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பதிவாளர் கணேசனை மாற்றம் செய்து துணைவேந்தர் எம்.கே.சூரப்பா உத்தரவிட்டதுடன், புதிய பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் ஜெ.குமாரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Courtesy : Dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்