அண்ணா சாலையில் பள்ளம்

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்ரோ ரயில் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்.

0
1263
அண்ணா சாலையில் ஏப்ரல் 9ஆம் தேதி ஏற்பட்ட பள்ளத்தில் சரிந்த 25ஜி பஸ்ஸும் காரும்.

தமிழ்ப் புத்தாண்டு தினம்; 11ஆம் நம்பர் பஸ் டிரைவர் கணிசமான வேகத்தில்தான் வந்துகொண்டிருந்தார்; ஜெமினி பாலத்துக்கு முன்னாலுள்ள பஸ் நிறுத்தத்தைத் தாண்டிச் செல்லும்போது மட்டும் ரொம்பவே ஓரங்கட்டி மெதுவாக பார்த்து பார்த்து சென்றார்; அதற்கு மறுநாள் இரவில் தி.நகரிலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த டாக்ஸி ஓட்டுநர் சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயில் வேலைக்காக வேலிகள் கட்டப்பட்டிருக்கும் இடத்துக்கு அருகே எக்கச்சக்கமாக வேகத்தைக் குறைத்து மெதுவானார்; “பள்ளம் விழுந்துடுமோன்னு பயமாயிருக்கு; பார்த்துதான் போகணும்” என்றார் அவர்; 2015ஆம் ஆண்டில் டிசம்பர் 1ஆம் தேதி சென்னைப் பெருமழைக்குப் பிறகு ஒரு மாத காலமாக கிண்டிக்கும் சைதாப்பேட்டைக்குமிடையே அடையாறு பாலத்தை மின்சார ரயில்கள் மெதுவாக மாட்டு வண்டிபோல கடந்து சென்றது நினைவுக்கு வந்தது. பயம் பரவிக் கிடக்கிறது. ஏப்ரல் 9ஆம் தேதியன்று 25 ஜி பஸ் அண்ணா சாலையில் ஜெமினி நிறுத்தத்துக்கு அருகில் திடீர் பள்ளத்தில் விழுந்தது. பஸ் நின்றுகொண்டிருக்கும் நிலையில் சாலைக்குள் புதைந்ததால் 35 பயணிகளும் கண்டக்டரும் டிரைவரும் தப்பிப் பிழைத்தார்கள். பஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சாலை சரிந்திருந்தால் மக்களுக்குக் கடுமையான காயங்கள் உண்டாகியிருக்கும்.

இதையும் பாருங்கள்: நெடுவாசல்

இதையும் பாருங்கள்: என்.டி.ஆர்

ஞாயிற்றுக்கிழமை; மதியம் இரண்டு மணி; இவையெல்லாம் பேரிழப்புகளிலிருந்து நம்மைக் காப்பாற்றியுள்ளன; மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்டிசி) ஓட்டுநர் பி.குணசீலன் (54) பஸ்ஸின் சக்கரங்கள் பழுதாகியுள்ளன என்று சொல்லிதான் பயணிகளை இறக்கி விட்டிருக்கிறார்; பதற்றமும் உயிரிழப்பும் உண்டாகாமலிருக்க குணசீலனின் முன்யோசனையும் காரணமாக இருந்தது. ”டயர் பஞ்சர்; இறங்கிடுங்கன்னு சொல்லிட்டு எல்லோரும் இறங்கும்வரை காத்திருந்தேன்; ஓர் அம்மாவிடமிருந்த சிறு குழந்தையை தூக்கிக்கொண்டு நான் இறங்கினேன்” என்று இப்போது டாட் காமிடம் சொன்னார் குணசீலன். அதேபோல நடத்துநரும் ஒரு தாயிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு இறங்கியதை குணசீலன் நினைவுகூர்ந்தார். “இப்போது பள்ளமான இடத்தில் இரும்புத் தகடு போட்டுள்ளார்கள்; அது தார் சாலையைவிட சற்று பள்ளமாக இருக்கிறது; பார்த்துதான் ஓட்டி வர வேண்டியிருக்கிறது” என்கிறார் இந்தச் சாதனை ஓட்டுநர். 25ஜியைத் தொடர்ந்து ஓட்டினாலும் இந்த ஒரு இடத்தில் மட்டும் பார்த்துக் கவனமாக இருக்கும்படி அந்தச் சம்பவம் தன்னை மாற்றியுள்ளதாக சொல்கிறார் இவர்.

இதையும் பாருங்கள்: நந்தினி

இதையும் பாருங்கள்: ஃபாரூக்

சற்று பின்னோக்கிப் போவோம்; மார்ச் 30ஆம் தேதி. வியாழக்கிழமை; அண்ணா சாலையிலிருந்து தி.நகருக்கு ஆட்டோவில் வந்துகொண்டிருந்தேன்; எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலிலிருந்து ஒயிட்ஸ் சாலைக்குச் செல்வதைத் தடுத்து போக்குவரத்துக் காவலர்கள் மறிப்புகளைப் போட்டிருந்தார்கள்; மதியம் ஒரு மணியாகியிருந்தது; போக்குவரத்துக் காவலர் ஒருவரிடம் கேட்டேன்; ”தெரியலீங்க; அண்ணா சாலையிலிருந்து தேனாம்பேட்டைக்குப் போக முடியாது” என்றார். ராயப்பேட்டை நெடுஞ்சாலை திணறியது; 20 நிமிடங்களுக்கு மேலாக சுள்ளென்று அடித்த வெயிலில் வெஸ்லி ஆலயத்தின் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். “ஞானம் பெறுங்கள்” என்கிற பைபிள் வாசகத்தைப் பெரிதாக எழுதியிருந்தார்கள். ஆட்டோக்காரர் கேட்டார் “என்ன நடக்குதுன்னே தெரியல; விசாரிச்சு சொல்லவும் யாருக்கும் அக்கறை இல்ல.” எவ்வளவு வாட்ஸப், டிவி இருந்தும் அந்தப் போக்குவரத்து நெரிசலைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் கால அவகாசம் தேவையாக இருக்கிறது. “மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ரஜினிகாந்தைச் சந்திக்க வந்திருக்கும் வேளையில் சென்னை இப்படி அல்லோலகல்லோலப்படுகிறது” என்று நான் சொன்னேன். ஆட்டோக்காரர் திட்டவட்டமாகச் சொன்னார் “விஐபிக்கெல்லாம் இந்தத் தலைவலியே இல்லாமல் ஏர்போர்ட்-கோட்டூர்புரம்-போயஸ் கார்டன் ரூட்டைத் தயார் செய்திருப்பார்கள்; நமக்குதான் இதெல்லாம்”.

இதையும் படியுங்கள்: வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்

இதையும் படியுங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் 25: அவர் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?

நாற்பது நிமிடத்தில் புதுக்கல்லூரிக்கு வெளியே பீட்டர்ஸ் ரோடுக்கு வந்தோம்; பீட்டர்ஸ் ரோடு பாலத்தையும் மூடியிருந்தார்கள்; பெண் காவலர் ஒருவர் “ஜெமினியிலிருந்து தேனாம்பேட்டை போக முடியாது; பைக், ஆட்டோவை மட்டும் அவசரம் கருதி அனுமதிப்போம்” என்றார். ஊடகம் என்று சொன்னதால் கொடுக்கப்பட்ட சின்ன இடைவெளியில் பாலத்தில் ஏறி வந்தோம். ஜெமினி பாலத்துக்கு முந்திய பஸ் நிறுத்தத்திற்குப் போக வேண்டியதில்லை. அதற்கு சற்று முன்னரே உள்ள இடம் அது. சர்ச் பார்க் கான்வென்ட் வாசல் அது. முக்கால்வாசி சாலையை சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் பச்சை நிற வலையால் தடுத்திருந்தார்கள்; ஆட்டோக்களுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும் மட்டும்தான் போக இடமிருந்தது. தடுக்கப்பட்ட வலைகளுக்குள் நீரும் சகதியும் கலந்த கலவை ஊற்றாகப் பீறிட்டுக்கொண்டு வந்தது. தந்தி டிவியின் செய்தியாளர் ஒருவர் அதைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். கடந்த பல மாதங்களாகவே சென்னை அரசினர் தோட்டத்திலிருந்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்துக்கிடையில் பூமிக்கடியில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது; இன்னும் சுமார் மூன்று மாதங்களில் பணி நிறைவடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முன்பு செப்டம்பர் 12, 2016 அன்று மாலையில் அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாஸாவுக்கு எதிரில் சுமார் ஒரு மணி நேரம் மணலும் நீரும் கொப்பளித்துக்கொண்டு ஓடியதில் போக்குவரத்து மடைமாற்றப்பட்டது; அதற்குப் பின்னர் நடந்த பெரிய சம்பவம் இது.

இதையும் படியுங்கள்: ஜாதியை ஒழிக்காமல் கழிவறை துர்நாற்றத்தை ஒழிக்க முடியாது

இதையும் படியுங்கள்: ஜிஷாவும் அம்பேத்கரும்

அண்ணா சாலையில் மண்ணின் மேல் அடுக்குகள் இளகும் தன்மை கொண்டவை; எப்போது வேண்டுமானாலும் நெகிழ்ந்துவிடக்கூடும் என்பது 2011இல் தொடங்கிய சென்னை மெட்ரோ ரயிலின் மண் பரிசோதனையிலேயே தெரிய வந்த விஷயம்தான்; இதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் சுரங்கப் பாதை அமைக்கும் பணியைப் பாதுகாப்பாக மேற்கொள்வதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சொல்கிறது; ஆனால் மார்ச் 30ஆம் தேதியன்று உருவான வெடிப்பின்போது எடுத்த நடவடிக்கைகள் முழுமையாக இல்லாமல் போனதுதான் ஏப்ரல் 9ஆம் தேதியன்று பள்ளம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்று நம்புவதற்கு நிறையவே இடமிருக்கிறது. இருந்தாலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்தக் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இப்போது டாட் காம் இதைப் பற்றி எழுப்பிய மிகவும் குறிப்பான கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பதிலளிக்கவில்லை. டெல்லி மெட்ரோவின் முதன்மை ஆலோசகரான இ.ஸ்ரீதரன் “இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது; சுரங்கப் பாதை அமைக்கும் எந்திரத்தின் காரணமாக இது நடந்திருக்கக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நிறுவனமயப்பட்ட ஒடுக்குமுறையைச் சீரழியுங்கள்

மார்ச் 30ஆம் தேதி சம்பவத்துக்குப் பிறகு பொங்கி வந்த மணலையும் தண்ணீரையும் சில நாட்களாக அள்ளியிருக்கிறார்கள். காலை 8 மணி வரை அந்த வழியாக பேருந்துகளை நிறுத்திவிட்டு மெல்ல மெல்ல இரும்புத் தகடுகள் போட்டார்கள். தகடு போட்ட இடத்திலிருந்து பத்தடி தொலைவில்தான் ஏப்ரல் 9ஆம் தேதியன்று சாலை சரிந்துள்ளது; ”பாதுகாப்புக்கான எல்லா நடைமுறைகளையும் நாங்கள் கடைபிடிக்கிறோம்; சுரங்கப்பாதையின் ஒவ்வொரு பத்து மீட்டரிலும் கண்காணிப்புக்கான வசதி செய்யப்பட்டுள்ளது; ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்தப் பாதையில் மாற்றம் உண்டாகிறதா என்று அளவீடு செய்யப்படுகிறது” என்று சென்னை மெட்ரோ ரயில் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் விளக்கமளித்துள்ளது. ஆனால் துல்லியமாக அளவீடு செய்யப்பட்டிருந்தால் இப்படியொரு சரிவு உண்டாவதை முன்கூட்டியே கணித்திருக்க முடியும் என்பதுதான் வல்லுநர்கள் கருத்தாக இருக்கிறது. ”சரிவர கண்காணிக்காமலிருப்பது அல்லது சரியாக புலனாய்வு செய்யாமல் இருப்பதுதான் பிரச்சினை; அண்ணா சாலையில் மேலுள்ள மண் அடுக்குகள் பலவீனமானவை என்பது மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு நன்றாகவே தெரியும்” என்று இப்போது டாட் காமிடம் சொன்னார் சென்னை ஐ.ஐ.டி பேராசிரியரும் நிலநுட்பப் பொறியியல் நிபுணருமான பூமிநாதன்.

இதையும் படியுங்கள்: மதவெறியைப் பரப்பி மக்களை ரத்தம் சிந்த வைக்கும் பத்திரிகைகள்

இதையும் படியுங்கள்: நீதி தேவதையையும் என்கவுன்டர் செய்து விடுவார்கள்: எச்சரிக்கை

அண்ணா சாலையில் போக்குவரத்தைப் பெருமளவுக்குப் பாதிக்காமல் பணிசெய்ய வேண்டிய கட்டாயமும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு இருந்திருக்கும். “முதலில் உருவான வெடிப்பைச் சரி செய்ய என்ன பொருளைப் பயன்படுத்தினார்கள்; எவ்வளவு பயன்படுத்தினார்கள்; அந்தப் பொருள் கெட்டியாகி உறுதியாக எவ்வளவு நேரம் கொடுத்தார்கள் என்பதில்தான் தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளது” என்று இப்போது டாட் காமிடம் சொன்னார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிலவியல் பேராசிரியரும் சுரங்கத் தொழில்நுட்ப வல்லுனருமான ராஜேஸ்வர ராவ். போக்குவரத்து அதிகமுள்ள பகுதி என்பதால் மார்ச் 30ஆம் தேதியன்று உடைப்பைச் சரிசெய்வதற்கு உட்செலுத்தப்பட்ட பொருள் அவசர அவசரமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்; அது போதுமான அளவில் செலுத்தப்பட்டு இடைவெளியை இட்டு நிரப்பாமல் இருந்திருக்கலாம்; மெட்ரோ ரயில் நிர்வாகம் அளவிட்டதைவிட நீளவாட்டில் கூடுதலான பிளவு அல்லது உடைப்பு உண்டாகியிருக்கலாம். ”மெட்ரோ ரயில் நிர்வாகம் கணித்ததில்தான் பிரச்சினை” என்று உறுதிபடச் சொல்கிறார் பூமிநாதன். துல்லியமான கருவிகளுடனும் சரியான கால இடைவேளைகளிலும் மண்ணின் மேலடுக்குகளில் ஏற்படும் அழுத்தத்தைக் கணக்கிடுகிறோம், கண்காணிக்கிறோம் என்று சென்னை மெட்ரோ ரயில் சொல்வதில் பிழை இருக்கலாம் என்பதையே இந்த நிபுணர்களின் வாதங்கள் உறுதி செய்கின்றன. பெரும் திட்டங்களில் பிழைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்வதிலிருந்துதான் தொடரப் போகும் இந்த மெட்ரோ ரயில் பணிகளைப் பாதுகாப்பானதாக ஆக்க முடியும்.

இதையும் படியுங்கள்: மெட்ரோ ரயிலை எல்லோருக்குமானதாக மாற்றுங்கள்

இதையும் படியுங்கள்: சமூக, பொருளாதாரச் சுமையாகும் மது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்