அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல என்றும், அனைத்து மாநிலங்களும் ஆலோசித்து ஏற்றுக் கொள்ளும் வரை மசோதாவை நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவியில் இன்று அணை பாதுகாப்பு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசிய மு.க.ஸ்டாலின், அணைகளை பாதுக்காப்பது மாநில அரசின் உரிமை என்று தெரிவித்தார்.

மத்திய அரசு தேவைப்பட்டால் மட்டும் உதவலாம் என்ற அவர், அணைகளை மத்திய அரசு கைப்பற்ற நினைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று கூறினார். தேசிய அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர முயற்சிப்பதை தமிழக அரசு எதிர்க்கவும் வலியுறுத்தினார்.

அதற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த மசோதா தமிழகத்திற்கு ஏற்புடைது இல்லை என பிரதமருக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அணைப்பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பிரிவின் படி ஒரு மாநிலத்துக்கு சொந்தமான அணை வேறொரு மாநிலத்தில் அமைந்திருதால், அந்த அணை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரும் என்று தெரிவித்த அவர், தமிழகத்துக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப் பள்ளம் அணைகள் தமிழக – கேரள ஒப்பந்தங்களின் அடிப்படையில் தமிழக அரசால் கட்டப்பட்டு இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இந்த அணைகளை தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டு வந்து அணையின் மேல் பகுதி மற்றும் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களின் பிரதிநிதிகள் குழுவை அமைப்பது தமிழ்நாட்டின் உரிமைகளில் தலையிடுவதாகும் என்றும் தெரிவித்தார்.

அணை வேறு மாநிலத்தில் அமைந்திருந்தாலும், அது எந்த மாநிலத்துக்கு சொந்தமோ அந்த மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி மசோதாவை திருத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அணையை பராமரிக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அணை அமைந்துள்ள காடுகள், வனவிலங்கு சரணாலயங்களுக்குள் சென்று வர உரிமை அளிக்கும் வகையில் துணைப்பிரிவை சேர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here