முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஜெய்சால்மர் மாவட்டத்திலுள்ள பொக்ரானில் அவரது உருவப் படத்துக்கு  மரியாதை செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.


அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் மாறுதலுக்கு உள்ளாகலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியுள்ளார். 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் முதல் நினைவு தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 1998-ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணு ஆயுதச் சோதனை நடத்தப்பட்ட ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானுக்கு ராஜ்நாத் சிங் சென்றார். அங்கு அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் சுட்டுரையில் அவர் பதிவிட்டதாவது: 

இந்தியாவை அணு ஆயுத சக்தி நாடாக மேம்படுத்த பொக்ரானில் உறுதியான நடவடிக்கையை வாஜ்பாய் மேற்கொண்டார். அப்போது முதலாகவே அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது அப்போதைய சூழ்நிலையை பொருத்ததாக இருக்கும். 

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை அப்போது மாறலாம். அணு சக்தியை பொறுப்புடன் பயன்படுத்தும் நாடு என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான பெருமையாகும். இதற்காக இந்த தேசம் வாஜ்பாய்க்கு என்றும் கடமைப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். 

மத்திய ஆசிய நாடுகளுடனான உறவு வலுப்படும்:

 முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்ற 5-ஆவது சர்வதேச ராணுவ வீரர்களுக்கான போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். 

அதில் அவர் பேசியதாவது: 

ரஷியா, சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வரும் காலங்களில் மேலும் வலுவடையும் என்று நம்புகிறேன். நம்மிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிக்கும் பட்சத்தில், கடினமான சவால்களையும், அச்சுறுத்தல்களையும் தகுந்த ஆதரவுடன் நம்மால் எதிர்கொள்ள இயலும். எதிர்காலத்தில் மத்திய ஆசிய நாடுகளுக்குள்ளான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ராணுவ வீரர்களுக்கு இடையேயான போட்டிகள் என்ற இதுபோன்ற நிகழ்வுகள் மூலம், அதில் பங்கேற்கும் நாடுகளிடையேயான உறவு பலப்படும். 

தற்போது இந்தப் போட்டியில் பங்கேற்ற நாடுகளுடன் இந்தியா ஏற்கெனவே நல்ல நட்புறவு கொண்டுள்ளது. ரஷியாவுடனான நட்புறவு மிக நீண்டகாலமாக இருந்துவருகிறது. சீனாவுடனான ராணுவப் பயிற்சியின் மூலம், அந்நாட்டுடனான இந்தியாவின் புரிதல் அதிகரித்துள்ளது. பெலாரஸ், ஆர்மீனியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளோடு இந்தியா நல்லதொரு கலாசார, வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் பேசினார். 

சர்வதேச ராணுவ வீரர்களுக்கான இந்தப் போட்டியில் இந்தியா,  ரஷியா, சீனா, ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், சூடான், உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற இந்தியா, முதலிடம் பிடித்தது. 

கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும்: 

இதனிடையே, அணு ஆயுதக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், பாதுகாப்புத் துறை அமைச்சரின் இந்தப் பேச்சு தெளிவற்றதாக உள்ளது. அணு ஆயுதத்தை கையாளும் நடவடிக்கையில் மத்திய அரசின் புதிய கொள்கை என்ன என்பதை தெளிவாக அறிந்தால் இந்த நாடு மகிழ்ச்சியடையும். 

எனவே, அதுதொடர்பான தனது கொள்கையை மத்திய அரசு குழப்பமின்றி, தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். 

ஏனெனில் இது மிகத் தீவிரமான விஷயமாகும். இதுபோன்ற விவகாரங்களில் குழப்பம் இருக்கக் கூடாது என்றார்.

Courtesy: DN