செவ்வாயன்று மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் 2016 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா இருவருக்கும் இறுதிப் பயணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டியது ஒருவரே என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார்.இவர் ‘ஹோமேஜ்’ என்ற பெயரில் இறுதி யாத்திரைக்குத் தேவையான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட  உபகரணங்கள் வழங்குவதை தன்னுடைய வேலையாகச் செய்து வருகிறார்.  சென்னையில் முக்கிய பிரபலங்கள் மரணமடையும் பொழுது இவருடைய சேவைதான் அழைக்கப்படுவது வழக்கமாகும்.
அப்படி இதுவரை நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பாலசந்தர் மற்றும் பத்திரிக்கையாளர்  சோ உள்ளிட்டோரின் இறுதி யாத்திரையில் ஆம்புலன்ஸ் இயக்கியுள்ளார்.
அந்த வகையில் உடலநலக்குறைவால் மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையிலிருந்து, கோபாலபுரம் இல்லம், அங்கிருந்து சி.ஐ.டி காலனி இல்லம், பின்னர் அங்கிருந்து ராஜாஜி அரங்கம் ஆகிய இடங்களுக்கு தனது ஆம்புலன்ஸில் வைத்து ஓட்டிச் சென்றவர் இவர்தான். கருணாநிதிக்கு என புதிதாக வாங்கப்பட்ட ‘பிளையிங் ஸ்குவாட்’ என்னும் வகை ஆம்புலன்ஸ் வாகனம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆச்சரியப்படத்தக்க வகையில் 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பொழுதில், அவரது உடலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றதும் சாந்தகுமார்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த இரு தலைவர்களின் இறுதிப் பயணத்திற்கும் ஒரே நபர்தான்  ஆம்புலன்ஸ் ஒட்டியுள்ளார் என்பது அதிசயத்தக்க வகையில் அமைந்த ஒற்றுமையாகும். 
#Karunanidhi, #Jayalalithaa

courtesy :http://www.dinamani.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here