கர்நாடகாவில் சாலை விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்யாமல் புகைப்படம் எடுக்கும் கொடூரம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் கோப்பாலில் சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் வலியால் துடிப்பதை பார்த்து உதவி செய்யாமல், சிறுவனை சுற்றி நின்று வலியால் துடிப்பதை, பொதுமக்கள் புகைப்படம் எடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அன்வர் அலி என்ற 17வயது சிறுவன், மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறான். எப்போதும் போல புதன்கிழமையன்று தனது சைக்கிளில் மார்கெட் சென்ற அன்வரை மாநில போக்குவரத்து பேருந்து இடித்து விட்டு சென்றுள்ளது. இதில் காயமடைந்த சிறுவனுக்கு ரத்தம் வரத் தொடங்க வலியால் சிறுவன் அழுதுள்ளான். ஆனால் அழுகும் சிறுவனுக்கு முதலுதவி செய்யாமல் சுற்றியிருந்த மக்கள் அனைவரும் சிறுவன் துடிப்பதை புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் 25 நிமிடம் ஆம்புலன்ஸ் வரும் வரை சிறுவனை சுற்றி வெறும் புகைப்படம் மட்டும் எடுக்கும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் அதிக ரத்தப்போக்கு மற்றும் கால தாமதத்தால் உயிரிழந்துள்ளார். இது பற்றி அன்வரின் சகோதரர் பேசும்போது, ”யாருமே உதவுவதற்கு முன்வரவில்லை. எல்லாரும் புகைப்படம் எடுப்பது, வீடியோ பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். கிட்டதட்ட 20 நிமிடங்களுக்கு மேல் வீணாக்கப்பட்டது, யாராவது ஒருவர் உதவ வந்திருந்தால் இன்னும் விரைவாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று எனது சகோதரனை காப்பாற்றி இருக்கலாம்” என கூறினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்