இனையதளத்தில் தமிழ் திரைப்படங்களை உடனுக்குடன் வெளியிட்டு தமிழ் திரையுலகத்தையே கதிகலங்க வைக்கிறார்கள் இணையத் திருடர்கள். இது திரைப்படங்களின் வசூலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்க தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டன.

ஆனாலும் இதனால் எந்த பலனும் ஏற்படவில்லை. ரஜினிகாந்தின் கபாலி, காலா, பேட்ட ஆகிய படங்கள் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளியானது.

அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் ஒரு சில மணி நேரங்களிலேயே வெளியாகி தயாரிப்பாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தன, இதுபோல் விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களும் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளிவந்தன.

உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே மற்றும் எல்.கே.ஜி. படங்களும்  இணைய தளத்தில் வெளியானது. தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களையும் தியேட்டருக்கு வந்த சில மணி நேரங்களிலேயே இணையதளத்தில் வெளியிட்டனர் பீதியைக் கிளப்பினர்.  தயாரிப்பாளர்கள் இதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படமும் இணையதளத்தில் தற்போது வெளியாகிப் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை இணையதளத்தில் வெளியிடக்கூடாது என்று கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதையும் மீறி இணையதளத்தில் வந்துள்ளது படக்குழுவினரையும் வினியோகஸ்தர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த திருட்டுப் பூனைக்கு யார்தான் மணி கட்டுவார்களோ?