அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும் கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும் கிறிஸ்டியன் மைக்கேல் , துபாயிலிருந்து இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நாடு கடத்தி கொண்டுவரப்பட்டார்.

இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,100 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2010-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்துக்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சார்பில் இந்திய தரப்புக்கு ரூ.423 கோடி வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014-இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் 3 இடைத்தரகர்களில் முக்கிய நபராக குற்றம்சாட்டப்படுபவர் பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் மைக்கேல் . விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்டோருடன் சேர்ந்து குற்றச் சதியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டு உள்ளது.

இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்வதை கிறிஸ்டியன் மைக்கேல் தவிர்த்து வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக, பிணையில் வெளிவர இயலாத பிடியாணையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்தது. அதனடிப்படையில், சர்வதேச காவல்துறை மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், துபாயில் கடந்த 2017, பிப்ரவரியில் கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம், கிறிஸ்டியன் மைக்கேலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவரது மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு, ஐக்கிய அரபு அமீரகம் அரசு ஒப்புதல் வழங்கியது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வழிகாட்டுதலின் அடிப்படையில், கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிபிஐ இடைக்கால இயக்குநர் எம்.நாகேஸ்வர ராவ் இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்தார்.

சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையிலான குழுவினரால், துபாயில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10.35 மணியளவில் கிறிஸ்டியன் மைக்கேல் கொண்டுவரப்பட்டார். செவ்வாயன்று நள்ளிரவு டெல்லி வந்த அவரிடம் சிபிஐ தலைமையகத்தில் வைத்து நள்ளிரவு முழுவதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here