ஃபேஸ்புக் நாயகர்களான சாமானியர்கள்

1
3857

(ஆகஸ்ட் 29,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

இருபத்தியோராம் நூற்றாண்டு பல்வேறு தொழில்நுட்பங்களோடு படுவேகமாய் பயணித்துக் கொண்டிருக்கின்றது; இவ்வேளையில் தொழில்நுட்பங்களைத் தங்கள் பக்கம் வசப்படுத்தி தனெக்கென ஒரு ரூட்டில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மோடி முதல் கடைக்கோடி லேடி வரை ஃபேஸ்புக், ட்விட்டர் என கொஞ்சம் பிஸியாகவே இருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாடம் கடந்து போகின்ற விஷயங்களை தங்களுக்கே உரிய நடையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு ஒட்டுமொத்தமாய் அப்ளாஸ் அள்ளுபவர்கள் சாமானியர்களாகவே இருக்கின்றார்கள். அவர்கள் நம் பக்கத்து வீட்டில் இருந்துகொண்டு ஃபேஸ்புக்கில் ‘‘ஹேப்பி மார்னிங்” என ஸ்டேட்டஸ் போட்டு அதற்கு 600 லைக்ஸ் வாங்குகிறார்கள்; நம்ப முடியவில்லையா? அட நம்புங்க பாஸ்.!

ஃபேஸ்புக்கில் பெரும்பாலானோர் துணுக்குப் பதிவுகளோடு வலம் வந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், வெகுசிலரே அனுபவம் நிறைந்த தகவல்களோடு, சமூக அக்கறை கொண்ட அரசியல் வாதங்களைத் தமிழில் பதிவு செய்துவருகின்றனர். அவர்களுடைய அரசியல் வாதங்களைப் பார்க்கின்றபொழுது ‘‘நீங்கெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல” என நம்மையே ஸ்டேட்டஸ் போட வைக்கின்றார்கள்.

என்னதான் பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்காக இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாளில் ‘நம்மாளுக காப்பி ரைட்ஸ் வாங்கினாலும் அதிசயப்படுவதற்கு ஒன்றும் இல்லை’. அந்த அளவிற்கு இந்தியாவின் நான்கு மூலைகளிலும் அட ஏங்க உலகம் முழுவதும் ஃபாலோயர்ஸ்களை வைத்துக்கொண்டு ஃபேஸ்புக் பிரபலங்களாக வலம் வந்துகொண்டிருக்கின்ற சாமானியர்களுக்கு வலை வீசியபோது ஃபேஸ்புக் பதிவோடு சிக்கியவர்கள் ‘இப்போது’ நம்மோடு….!

மாணிக் வீரமணி


unnamed (3)

மாணிக் வீரமணியின் சொந்த ஊர் ராமநாதபுரத்தை அடுத்த ஒரு குக்கிராமம். கத்தாரில் ஓட்டுனராக பணிபுரிகிறார். சுமார் 10,000 ஃபாலோயர்ஸ்களுடன் ஃபேஸ்புக்கை கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்,

‘பாஸு, பேட்டி கொடுக்கிற அளவிற்கு ஒண்ணும் பண்ணலங்க. பதினோராவது வரையும் படிச்சிருக்கேன். அதுக்கப்புறம் பள்ளிக்கூடம் பக்கமே போகல ஆனா எங்க ஊர்ல இருந்த நூலகத்துக்கு அடிக்கடி போவேன். 2012இல் தான் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினேன். இங்கிலீஷ் கத்துக்கிறதுக்காக தெரியுதோ, தெரியலையோ வெளிநாட்டுல இருக்கவங்களுக்கெலாம் ரிக்வெஸ்ட் தட்டிவிட்டேன். அவுங்ககூட மெசேஜ் பண்றப்போ பக்கத்துலேயே டிக்ஷ்னரி ஒண்ணு வச்சுப்பேன். மனுசனுங்க சில நேரத்துல கெட்ட வார்த்தையிலகூட திட்டுவானுங்க. அது தெரியாமலேயே பேசிட்டு இருந்துருக்கேன்னா பாத்துக்கங்களேன்’ என்றார்.

பாஸ், இந்த டேக்(Tag) பண்றவங்க பத்திச் சொல்லுங்க?

அட ஏன் பாஸு, நானும் ஒரு காலத்துல காலை வணக்கம் னு ஸ்டேட்டஸ் போட்டு 99 பேருக்கு டேக் (Tag) செஞ்ச ஆளுதான். ஆனா அதுக்கப்புறம் கொஞ்சமாவது உபயோகமா பயன்படுத்தலாம்னு தான் அன்றாடம் சமூகத்தில நடக்கின்ற பிரச்சினைகள் பத்தி பேச ஆரம்பிச்சேன். அதுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதைவிட எதிர்ப்பு ரொம்ப நல்லாவே கிடைச்சது.

எதிர்ப்பா? அது யாரு?

ஆரம்பத்திலிருந்தே எனக்கு பெரியார், கம்யூனிசக் கொள்கைகள் மேல ரொம்ப ஈடுபாடு இருக்கு. அதனால தொடர்ந்து அது தொடர்பான பதிவுகளை என்னுடைய பக்கத்தில் அப்டேட் பண்ணிட்டு வந்திட்டு இருக்கேன். இது சுத்தமா இந்த மதம், சாதி பேசுற ஆட்களுக்குப் பிடிக்காது. வேணும்னே வந்து நம்மள திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஒருநாள் கத்தாரிலிருந்து இந்தியா வரேன்னு ஸ்டேட்டஸ் போட்டேன் பாஸு. உடனே ஒருத்தர் வந்து, தகாத வார்த்தைகளில் திட்டி உன் வீட்டு அட்ரஸ் கொடுடா பாக்கலாம்னு கேட்டாரு, நான் அவர்கிட்ட தெளிவா அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் கொடுத்தேன். அன்னிக்கு ப்ளாக் பண்ணிட்டு போனவருதான் இன்னும் வரல பாஸு. ‘உங்களுக்கும் ஏதும் தெரிஞ்சா சொல்லுங்க’ என்றார்.

இருந்தாலும் எதுக்கும் சளைக்காம எழுதிறீங்களே?

எதுக்குங்க நம்ம பயப்படனும். (நம்மையும் சேர்த்துக் கொண்டார்). எனக்கு சின்ன வயசுல இருந்தே பேசவும் வரும், எழுதவும் வரும். அதை நம்ம சமூகத்திற்காக பயன்படுத்துறோம் அவ்ளோதான். இந்த எழுதறதுலயும் சில விஷயங்கள் இருக்கு. சில பேரு சுத்த தமிழ்ல எழுதுறேன்னு ஒண்ணுமே புரியாம பண்ணிடுவாங்க. நான் அப்படியில்ல. நான் ராமநாதபுரத்துக்காரன். என்னோட நண்பர்கள் கூட பேசறப்போ எப்படி பேசுவேனோ அப்படிதான் எழுதுவேன். இதுதான் லைக்ஸ் வர்றதுக்கான காரணமும் கூட. அப்போ ஈஸீயா நம்ம நியூஸ் எல்லோருக்கும் போயிடும்.

உங்களோட புத்தக வாசிப்பு?

எந்நேரமும் எங்க ஊர்ல இருக்க நூலகத்துலதான் இருப்பேன். அதுதான் இன்னைக்கு கொஞ்சமாவது சமுதாயத்தோட என்னை இயங்க வச்சிட்டு இருக்கு. வெள்ளைப் பேப்பரை தவிர மற்ற எல்லாப் பேப்பரும் படிப்பேன். டீக்கடைக்குப் போனா கூட வடையை கையில வச்சுட்டு இன்னொரு கையில பேப்பர் படிக்கிற ஆளு நான்.

கடைசியா நீங்க பொங்கி எழுந்த விஷயம் என்ன?

ஒண்ணுமில்லங்க, நானும் எங்க பெரியப்பாவும் குற்றாலம் போனோம். அங்க எடுத்த ஒரு போட்டோவ ஃபேஸ்புக்ல போட்டேன். ஒரு கம்யூனிசவாதியாய் இருந்துட்டு நீ இப்படி செய்வது சரியானு? ஒரு க்ரூப் கிளம்பிட்டானுங்க. இவனுங்கள நினைச்சாலே சிரிப்பு சிரிப்பா வருதுங்க என்றார்.


இவரைப்பற்றி கூடுதல் தகவல் ஒண்ணும் சிக்கியிருக்கு. சமீபத்தில் ராமநாதபுரத்தில் காவல் நிலையத்தில் நடந்த லாக் அப் மரணம் ஒன்றை ‘அது மரணம் அல்ல’ திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என இவர் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு 7000க்கும் மேற்பட்டவர்களால் ஷேர் செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த வழக்கை கொலை வழக்காய் பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்களாம்.

சட்டத்தையே தன் கடமையை செய்ய வைக்கிறீங்க பாஸ்.!.!

யோகேந்திரன் கார்ட்டூன்

unnamed (4)

யோகேந்திரன் உள்ளூர் பிரச்சினைகள் முதல் உலக அரசியல் வரை தன்னுடைய கார்ட்டூன்களால் பின்னியெடுப்பவர். அநீதிக்கெதிராக சாட்டையடி கொடுக்கும் வார்த்தைகளை விட ஒரே ஒரு கார்ட்டூன் போதும் உலகம் முழுதும் பேச வச்சிடலாம் என்றவரிடம் நாமும் பேசினோம்.

‘என்னுடைய தாய்நாடு இலங்கை. இப்போ நான் லண்டனில் வசித்து வருகிறேன். சின்ன சின்ன விஷயங்களுக்கு கார்ட்டூன் வரைய ஆரம்பிச்சு இன்றைக்கு பேஸ்புக் மூலமா நல்ல தொடர்புகளோடு என்னோட பணியைச் செய்து வருகிறேன். விலைவாசி உயர்வு முதல் மோடியின் வெளிநாட்டுப் பயணம் வரை நான் வரைஞ்ச கார்ட்டூன் பெரும்பாலானவர்களால் பேசப்பட்டது. ஜெயலலிதா, கலைஞர்னு யாராய் இருந்தாலும் விமர்சனம் செய்வேன். என்னைப் பொறுத்தவரையில் நான் ஜாதிக்கு எதிரானவன். அதனாலேயே பல நேரங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறேன் என்றார்.

நல்ல வேளை நான் இலண்டனில் வசிக்கிறேன்.!

தொடர்ந்து கார்ட்டூன் குறித்துப் பேசிய யோகேந்திரன், நான் இன்றைக்கு சுதந்திரமாய் என்னுடைய பணியைச் செய்து கொண்டிருக்கின்றேன். இதுவே நான் இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இருந்திருந்தால் நிச்சயம் என்னால் இவ்வளவு சுதந்திரமாய் இருந்திருக்க முடியாது என்றார்.

ஒருபக்கம் தீவிரமான விவாதங்களை ஆண்கள் மெருகேற்றிக் கொண்டிருந்தாலும் எதிர்மறையான விமர்சன அம்புகளை எதிர்கொண்டு நெஞ்சுரத்தோடு விமர்சனங்களை எடுத்து வைக்கும் பெண்களையும் பார்க்கலாம். தொடர்ந்து ஏராளமான கருத்துகளை எழுதி வரும் பெண்களுக்கு நடுவில் இரண்டு பேர் நம் கண்ணில் பளிச் பளிச் ஸ்டேட்டஸ்களோடு தென்பட்டனர். ஒருவர் தி.மு.க அபிமானி. மற்றொருவர் அ.தி.மு.க அபிமானி.

சுமி சுமா
unnamed (2)

அதிரடியான ஸ்டேட்டஸ்களோடு ஆளுங்கட்சியை கலாய்ப்பதில் வல்லவர் இவர். டெல்லிவாசி. என்னதான் டெல்லியில் வசிச்சாலும் அ.தி.மு.க அரசின் ஒவ்வொரு நகர்வையும் நகைச்சுவையோடு விமர்சிப்பதில் முதலிடத்தில் இருப்பவர். தீவிரமான தி.மு.க ஆதரவாளர். அதே நேரத்தில் பெரியாரிய சிந்தனைகளையும் தொடர்ந்து எழுதி வருபவர். சாதிக்கு ஆதரவாய் யாரேனும் பேச வந்தால் அவர்களுக்கெதிராய் குரல் கொடுக்கவும் தயங்காதவர். மோடியையும் இவர் விட்டு வைக்கவில்லை. இவரால் கலாய்க்கப்பட்டவர்களின் பட்டியலில் மோடி முன்னிலை வகிக்கிறார் என்றுதான் சொல்ல முடியும். மொத்தத்தில் 32000 ஃபாலோயர்ஸ்.

இவரின் பளிச் பளிச் ஸ்டேட்டஸ்கள் இதோ.!.!


ஜானகி ஸ்ரீதரன்

unnamed (1)

மக்களால் அம்மா, மக்களுக்காக அம்மா என அ.தி.மு.கவிற்கு ஆதரவான குரலாய் 11000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்களோடு ஃபேஸ்புக்கில் இருக்கிறார். அ.தி.மு.கவைப் பற்றி யாரேனும் ஸ்டேட்டஸ் போட்டால் அவர்களை வறுத்தெடுப்பதில் கில்லாடி. தி.மு.க தலைவர் கருணாநிதியை தினமும் ஒரு முறையாவது விமர்சிக்காமல் இருக்க மாட்டார். தி.மு.க ஆதரவாளர்களிடத்தில் நேரடியாக ஃபேஸ்புக்கில் சண்டையிட்ட பதிவுகளும் இவருடைய பக்கத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

இவர் கலாய்த்த ஸ்டேட்டஸ்களின் தொகுப்பு.!.!

ப்ப்பா!.! இப்படியெல்லாமா நடக்குது என யோசிப்பவர்கள் நம்முடைய டைம் மெஷினிலிருந்து கொஞ்சம் விலகியே இருக்கின்றார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால் சிலரின் விவாதம் தனிமனித தாக்குதல் என்பதை தாண்டி மிக நீண்ட ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு அழைத்துச் சென்றால் அவர்களையும் நாம் சலாம் போட்டு வரவேற்கலாம். இருப்பினும் ஒரு நூறு பேர் சேர்ந்து விட்டாலே ஒரு அமைப்பை உருவாக்கும் அவசர அரசியல் காலக்கட்டத்தில் சாதாரண கடைக்கோடி கிராமத்தில் இருந்து கொண்டு கிடைக்கின்ற தொழில்நுட்பத்தை தனக்குச் சாதகமாய் மாற்றிக்கொண்டு தங்களின் கருத்துக்களை உரக்கப் பேசுவதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்டேட் செய்யும் இந்த சாமானிய மனிதர்களை லைக் செய்யாமல் யாராலும் இருக்க முடியாது. ஷேர் செய்யாமலும் கூட!.

வாழ்த்துகள் அனைவருக்கும்!

1 கருத்து

  1. நான் பேஸ்புக்கில் அநேக நேரம் வலம் வந்த போதிலும் சுமி சுமா தவிர மற்றவர்களை பதிவுகள் இது நாள் வரை என் கண்களில் பட்டதே இல்லை. இன்றுதான் உங்கள் தளம் மூலம் அறிந்து கொண்டேன். நானும் அரசியல் சார்ந்த நையாண்டிகளை பேஸ்புக்கிலும் வலைத்தளங்களிலும் எந்த கட்சியை சாராமல் எழுதி வருகிறேன்..

ஒரு பதிலை விடவும்