நாவலாசிரியை ஃபாதிமா பூட்டோவுடனான சந்திப்பு ஒன்றுபற்றிய கட்டுரை ஒன்று The Hindu ஞாயிறு மலரில் வந்துள்ளது. அவருடைய The Runaways நாவல் விரைவில் வைகிங் மற்றும் பெங்குயின் இந்தியா வெளியீடுகளாக வர உள்ளதை ஒட்டி அது குறித்த முன்வைப்புகள் இப்போது மேற்கொள்ளப் படுகின்றன. அவருடைய The Shadow of the Crescent Moon 2013 இல் வெளிவந்து ஓரளவு கவனத்தைப் பெற்ற நாவல்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் தூக்குத்தண்டனை விதித்துக் கொல்லப்பட்டவருமான சல்ஃபிகார் அலி பூட்டோவின் பேத்திதான் ஃபாதிமா பூட்டோ. பிரதமராக இருந்தவரும் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டவருமான பெனாசிர் பூட்டோ இவருடைய அத்தை. பாத்திமாவின் தந்தை முர்டாஸா பூட்டோ 1996இல் கொல்லப்பட்டார். தனது முதல் நாவலில் தன் தந்தை கொல்லப்பட்டதற்கு தன் அத்தையும் அவரது கணவரும் முன்னாள் பாக் ஜனாதிபதியுமான ஆசிஃப் அலி சர்தாரியும்தான் காரணம் என பாத்திமா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த உரையாடலில் ஃபாதிமா இரண்டு முக்கிய கருத்துக்களை முன்வைக்கிறார். ஒன்று வரவிருக்கும் நாவல் பற்றியது. மற்றது இன்றைய சமூக ஊடகப் போக்கு ஒன்று குறித்தது. இதில் நாவல் பற்றி அவர் சொல்லியுள்ளதை மட்டும் பார்ப்போம்.

இன்றைய சூழலின் வன்முறையைத் தன் நாவல் பேசுவதாகக் குறிப்பிடுகிறார் ஃபாதிமா. சூழலில் மலிந்துள்ள வன்முறைகளே இன்றைய பயங்கரவாதங்களுக்கு அடிப்படையாக உள்ளது. ஆனால் இன்றைய IS பயங்கரவாதம் முதலியன பற்றி மேலைப் பண்பாடு எத்தகைய விளக்கத்தை அளிக்கிறது?

ஏதோ ஒரு குறிப்பான வன்முறையின் தாக்கத்தின் விளைவாகவே ஒருவன் பயங்கரவாதி ஆகிறான் என்பதுதான் மேலைப் பண்பாடு அளிக்கும் விளக்கம். எடுத்துக்காட்டாக ஈராக் மீதான தாக்குதலே அல்குவேதா மற்றும் அதில் உயிரைப் பணயம் வைத்துச் சேர்பவர்களின் உருவாக்கங்களுக்குப் பின்னணியாக உள்ளது என்பதுதான் அவர்கள் கூறும் விளக்கம்.. ஆனால் ஃபாதிமா இதை ஏற்கவிலை. இப்படி ஏதேனும் ஒரு தாக்குதல் அல்லது அதன் மூலமாகத் தனக்கு அல்லது தன் சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பின் ஆவேசத்தில் ஒருவன் அல்லது ஒருவள் பயங்கரவாதி ஆகிவிடுவதில்லை. மாறாக அவன் அல்லது அவள் வாழும் சூழலில் வன்முறை உள்ளது. அவன் நாள்தோறும் இனம், மதம், பொருளாதாரம் எனப் பல்வேறுவிதமான, நூற்றுக்கணக்கான ஒதுக்கல்கள், வெறுப்புகள், அவமானங்கள் ஆகியவற்றைச் சந்திப்பவனாக உள்ளான். அவற்றின் வேதனைகளை அவன் அனுபவித்துக் கொண்டே இருக்கிறான். அதுவே அவனை பயங்கரவாதப் பாதையை நோக்கித் தள்ளுகிறது என்கிறார் ஃபாதிமா.

இந்த நாவலில் அப்படியான மூவர், ஒருவர் கராச்சியிலுள்ள சேரிப் பகுதியிலிருந்தும், இன்னொருவர் லண்டனிலிருந்தும், மூன்றாமவர் மத்திய கிழக்கிலிருந்தும் பயங்கரவாத அமைப்பான IS ஐ நோக்கிச் செல்கிறார்கள் எனத் தெரிகிறது. நாவல் வெளிவந்தபின் அதைப் பார்ப்போம். இப்போது ஃபாதிமாவின் இக்கருத்தைப் பின்தொடர்வோம்.

அவரது கருத்து முற்றிலும் சரியானது. ஒவ்வொரு கணமும் எண்ணற்ற இதுபோன்ற ஒதுக்கல்களாலும் அவமானங்களாலும் பாதிக்கப் படுகிறவர்கள்தான் பயங்கரவாதப் பாதையை நோக்கித் தள்ளப்படுகின்றனர் என்பது முற்றிலும் சரியானது. இதை வாசித்துக் கொண்டிருந்தபோது அதை ஒட்டி எனக்கு இன்னொரு எண்ணம் தோன்றியது.

ஏதேனும் ஒரு தீவிரமான தாக்குதல் அல்லது பாதிப்பால்தான் ஒரு நபர் பயங்கரவாதத்தை நோக்கி நகர்த்தப்படுகிறார் என்கிற கருத்து ஃபாதிமா சொல்வதுபோல மேலைச் சமூகத்தில் உள்ளதென்றால் நமது சமூகங்களில் அதைவிட இன்னொரு அபத்தமான கருத்து பயங்கரவாதத்தைத் தேர்வு செய்பவர்கள் குறித்து வைக்கப்படுகிறது. அதைச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

2008இல் வெளிவந்த எனது ‘நெருக்கடிநிலை உலகம்’ எனும் நூலில் (எதிர் வெளியீடு, பொள்ளாச்சி) முன்னாள் CBI இயக்குனரும், The Hindu மற்றும் Frontline முதலான இதழ்களில் பத்திக் கட்டுரைகள் எழுதி வருபவருமான ஆர்.கே.ராகவன் ஒரு பயங்கரவாதி எவ்வாறு உருவாகிறான் என்பது குறித்துக் கூறியுள்ள கருத்தை விமர்சித்திருப்பேன். அவரைப் பொருத்த மட்டில் ஒவ்வொரு பயங்கரவாதியின் உருவாக்கத்தின் பின்னாலும் அவனது கிரிமினல் மனப்பாங்கு உள்ளது. அதாவது பயங்கரவாதம் என்பது சிலரின் அடிப்படைப் பண்பாக, அல்லது பிறவி இயல்பாக உள்ளது என்பது ராகவனின் கருத்து. 2006 ஜூனில் அல்குவேதா தலைவர்களில் ஒருவரான அபுமுசாப் அல் சர்காவி அமெரிக்கப் படையினரால் கொல்லப்படுகிறார். இதுகுறித்து எழுதும் ராகவன், “என்ன மாதிரியான பொருளால் ஒரு பயங்கரவாதி உருவாக்கப்பட்டுள்ளான் என்பதற்கு சர்காவியின் வாழ்க்கையே ஒரு அளவுகோல்” எனக் குறிப்பிடுவார் (Frontline, Sep 8, 2006). தொடர்ந்து அவர் கூறுவதன் சுருக்கம்:

“சர்காவியின் உண்மையான பெயர் அஹமத் ஃபாசில், ஜோர்டானியப் பாலைவனத்தில், ஒரு ஏழை பெதோய்ன் குடும்பத்தில் பிறந்தவன். 16 வயதில் பல்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய dropout. சில அற்ப வேலைகளுக்குப்பின், குறைபடிப்பும், முரட்டுத்தனமான இயல்பும் உள்ள அவன் ஒரு கிரிமினல் வாழ்க்கையைத் தேர்வு செய்தது மிக இயல்பானது. குடிகாரன், பாலியல் குற்றங்கள் செய்பவன், சிறைத்தண்டனை அனுபவித்தவன். 1989இல் அவனுக்குள்ளிருந்த ஜிஹாத் அவனை ஆஃப்கன் மீதான சோவியத் ஆக்ரமிப்புக்கு எதிராக ஈர்த்துச் சென்றது”.

ஒவ்வொரு வரியையும் கூர்ந்து கவனியுங்கள். பிறப்பு, கிரிமினல் வாழ்வு, கிரிமினல் புத்தி ஆகியவையே ஒருவரை பயங்கரவாதத்திற்கு இட்டுச் செல்கிறது என்கிறது ராகவனின் போலீஸ் மூளை.

அமெரிக்க சித்திரவதை முகாமான “குவான்டனமோ பே’யில் வைக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக விடுவிக்கப்பட்ட மோஸம் பெக் என்பவரின் Enemy Combatent நூலில் இருந்து அவர் எப்படி பயங்கரவாதியாக நேர்ந்தார் என்பதற்கு அவரே சொல்லும் காரணத்தை ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒரு விசாரணை அதிகாரி அவரைக் கேட்டபோது அவர் சொன்ன பதில்:

“ஐரோப்பாவிலேயே சிறந்த பன்மைச் சமூகம் பிரிட்டனில்தான் உள்ளது. ஆனால் இந்த நாட்டின் பல இடங்களில் நான் பொருத்தம் அற்றவனாகவே உணர்ந்தேன். ஆங்கில கிராமம் ஒன்றிற்கு எனது மாநிறத் தோலுடனும், தாடியுடனும், முகத்திரை அணிந்த மனைவியுடனும் செல்லும்போது என்னை அந்நியனாகப் பார்க்காத நிலையை நான் விரும்பினேன். தம் வாழ்நாளில் அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றைத்தான் நாங்களும் விரும்புகிறோம் என உணர்ந்து அவர்கள் எங்களை அணுக வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். நான் அவர்களோடு ஒன்று கலக்க விரும்பும்போது என்னை வெறுமனே சகித்துக் கொள்வதாகவன்றி என்னை ஆங்கிலேயர்கள் நேசிக்க வேண்டும் என விரும்பினேன்..”

ஆனால் பிரிட்டிஷ் சமூகம் அதைச் செய்யவில்லை. இப்படியான வலிகள், வேதனைகள், அவமானங்கள் ஆகியவையே ஒரு பயங்கரவாதியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைத்தான் இன்று ஃபாதிமாவும் எழுதுகிறார்..

The Raya Sarkar Interview

A “Nudge” for protecting free speech

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here